கார் விபத்தில் டாக்டர் அவரது மனைவி உட்பட 3பேர் பலி

கயத்தாறு அருகே கார் விபத்தில் டாக்டர் அவரது மனைவி உட்பட 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-11 02:17 GMT

விபத்து

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (50). இவர் வள்ளியூரில் சுகம் என்ற பெயரில் பிரபல மருத்துவமனையை நடத்தி வந்தாா். இவரது மனைவி ரமணி (48). இவரும் டாக்டர் ஆவார். ரவீந்திரனின் தாயார் சேர்மத்தாய் (81). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசித்து வந்தார். இவருக்கு கண் ஆபரேஷன் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிவகாசிக்கு சென்று சேர்மத்தாயை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனையை முடித்துவிட்டு மீண்டும் சிவகாசிக்கு திரும்பினர். அவர்கள் தங்களது உறவினர்களிடம் கூறிவிட்டு மாலையில் 3 மணியளவில் காரில் வள்ளியூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைகுளம் அருகே கார் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த ரவிந்திரன் உட்பட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3பேரின் உடல்களையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை கோவில்பட்டி டி.எஸ்.பி., வெங்கடேஷன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Tags:    

Similar News