இரு வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் காயம்
எட்டயபுரம் புறவழிச்சாலையில் 2 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த சமையல் தொழிலாளர்கள் 15 பேர் தூத்துக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வேனில் வந்தனர். திருமண நிகழ்ச்சியில் சமையல் பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு விளாத்திகுளத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்காக வேனில் புறப்பட்ட சென்று கொண்டிருந்தனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் எட்டயபுரம் புறவழிச்சாலையில் இருந்து விளாத்திகுளம் செல்லும் விலக்கில் அந்த வேன் திரும்பி உள்ளது. அப்போது எதிரே இருக்கன்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி பக்தர்கள் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சமையல் தொழிலாளர்கள் பயணித்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தொழிலாளர்கள் பயணித்த வேன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து நொறுங்கியது. அந்த வேனில் இருந்தவர்கள் வெளியேறி வர முடியாமல் கதறி கூச்சலிட்டனர். மற்றொரு வேனின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சென்ற தீயணைப்பு துறையினர் கவிழ்ந்து கிடந்த வேனுக்குள் இருந்தவர்களை கண்ணாடிகளை உடைத்து மீட்டனர்.
விபத்தில் இரு வேன்களிலும் டெய்சி ராணி (வயது 39), ராணி (40), வசந்தி (38), தெரசா (42), வீரபாகு (60), மூர்த்தி (56), வள்ளி (38), காளியம்மாள் (40), முத்துமாரி (35), பாண்டி (55), ஜெயலட்சுமி (38), அஞ்சலி (37) ஆகிய 12 பேர் பலத்த காயமடைந்து இருந்தனர். மேலும் 16 பேர் லேசான காயமடைந்தனர். இந்த 30 பேரையும் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக போலீசார் அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பலத்த காயமடைந்த 14 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த வேன் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.