பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள்

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-29 15:29 GMT

தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் அந்தமானில் தொடங்கியது. இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் கேரளா மற்றும் அதை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் ஆப்தமித்ர திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 200 பேரிடர் கால நண்பர்கள் தயார் நிலையில் உள்ளனர். இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035-க்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதேபோல் ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261295, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார்நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். .....

Tags:    

Similar News