2026ஆம் ஆண்டு 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும் - மு.க.ஸ்டாலின் !
2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அரசு பணியாளர் தேர்வு வாரியங்கள் மூலம் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது நாளாக அதிமுக உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து சட்ட பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சபாநாயகர், அவை செயல்படுத்துவதற்கு இடையூறாக உள்ள அதிமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்ற அறிவித்து, இன்று ஒரு நாள் அவை நடவடிக்கைளில் பங்கேற்க கூடாது என உத்தரவிட்டார் .
அதன்பின் பேசிய முதலமைச்சர், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக அனைத்து கட்சி உறுப்பினர்கள் இந்த அவையிலே விரிவாக பேசியிருக்கிறார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன். அன்றைய தினம் அவையில் இருந்து முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது கருத்தை பதிவு செய்து இருக்க வேண்டும். மாறாக தேவையற்ற பிரச்சனையை கூறி கிளப்பினார்கள்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெற்றது அவருடைய மனசையும் கண்ணையும் உறுத்துகிறது. கள்ளக்குறிச்சியில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அரசு பணியாளர் தேர்வு வாரியங்கள் மூலம் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.