வேலூர் தொகுதியில் சண்முகம் பெயரில் 9 வேட்பாளர்கள்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஒரே பெயரில் 9 வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்றுகொள்ளப்பட்டது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 50 வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன. மீதமிருந்த 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான தி.மு.க-வின் கதிர் ஆனந்த், பா.ஜ.க-வின் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க-வின் பசுபதி, நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனால், நான்கு முனைப் போட்டியைச் சந்திக்கிறது வேலூர் களம்.
இந்த நிலையில் சண்முகம், சண்முகவேலு, சண்முகசுந்தரம்’ என்ற பெயரிலேயே மொத்தமாக பத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும், அதில் ஒன்பது வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.பா.ஜ.க வேட்பாளர் ஏசி சண்முகம் தவிர்த்து, மற்ற அனைவருமே ( 8 பேரும்) சுயேட்சை வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். சத்துவாச்சாரியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக, ஏ.சி.சண்முகத்தின் இனிஷியலையும் கொண்ட வாணியம்பாடி அம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் என்பவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஜி.சண்முகம் என்பவர் இரண்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஒன்று நிராகரிக்கப்பட்டு, இன்னொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, வாணியம்பாடி கிரிசமுத்திரத்தைச் சேர்ந்த பி.சண்முகம், வேலூர் அருகேயுள்ள திருவலத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்த கே.சண்முகம்,
வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த ஜி.சண்முகம், வாணியம்பாடி புதூரைச் சேர்ந்த எம்.பி.சண்முகம் ஆகியோரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் ஆதரவாளர்கள் கூறுகையில், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரே பெயர் உடைய நபர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்குரிய அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு இந்தச் செயலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர் என்றனர்.