பரமத்தி வேலூரில் இன்று 9 லட்சத்தி 78 ஆயிரம் தேர்தல் பறக்கும் படை பறிமுதல்
பரமத்தி வேலூர் பகுதிகளில் இன்று 9 லட்சத்தி 78 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-22 10:37 GMT
பரமத்திவேலூர் பகுதியில் காவிரி பாலம் போலீஸ் செக் போஸ்ட் பகுதியில் நேற்று இரவு சுமார் 12 மணிக்கு மேல் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த வேலுசாமி தலைமையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் தங்கராசு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு முட்டைகளை ஏற்றிக்கொண்டு அங்கு கடைகளில் இறக்கி விட்டு மீண்டும் நாமக்கல் செல்ல வேலூர் காவிரி பாலம் செக் போஸ்ட் அருகே வந்த முட்டை லாரியை நிறுத்தி நேற்று இரவு 12 மணியளவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், வையப்பமலை பகுதியை சேர்ந்த சதீஷ்( 26) என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 800-ஐ லாரிக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்கள் கேட்டபோது ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்ததாக தெரிவித்ததன் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் சதீஷ் மறைத்து வைத்திருந்த ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 800- ஐ பறிமுதல் செய்து பரமத்திவேலுார் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் இன்று விடியற்காலையில் பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் ஒரு 1 லட்சத்து 9 ஆயிரம் பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்ததை அடுத்து ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை பறிமுதல் செய்து பரமத்திவேலுார் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதே போன்று வேலகவுண்டம்பட்டி அருகே நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள அக்கலாம்பட்டியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வளியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் முட்டை ஏற்றுவதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் மாரப்பன் (42) என்பவர் லாரியில் மறைத்து வைத்திருந்த ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் அலுவரிடம் ஒப்படைத்தனர்.