அமெரிக்க நிறுவனங்கள் உடன் ஒரே நாளில் 900 கோடி முதலீடு ஒப்பந்தம்! அசத்தும் ஸ்டாலின்!
அமெரிக்க சுற்றுப் பயணத்தில் சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்த நாட்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய பாதையை அமைத்துள்ளது எனவும், இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இந்த வேகத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி, அதிக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்போம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக 27ஆம் தேதி அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோ நகரிற்கு 28ஆம் தேதி சென்றடைந்தார். இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில், நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழில் தொடங்க அந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்த நாட்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய பாதையை அமைத்துள்ளது! முதல் நாளில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ₹900 கோடிக்கும் அதிகமான பாதுகாப்பான முதலீடுகள், பல துறைகளில் 4,100 புதிய வேலைகளுக்கு வழி வகுக்கின்றன.
நோக்கியா - ₹450 கோடி, 100 வேலை வாய்ப்புகள்
பேபால் - 1,000 வேலைகள்
ஈல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் - ₹150 கோடி, 300 வேலைகள்
மைக்ரோசிப் - ₹250 கோடி, 1,500 வேலைகள்
Infinx - ₹50 கோடி, 700 வேலைகள்
அப்ளைடு மெட்டீரியல்ஸ் - 500 வேலைகள். இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இந்த வேகத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி, அதிக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்!" என பதிவிட்டுள்ளார்.