புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் 9,050 மாணவியர் பயன்
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் 9,050 மாணவியர் பயனடைந்தனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
"பெண்கள் நாட்டின் கண்கள்" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பொன்மொழிக்கேற்ப கல்வி, பொருளாதாரத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக, அடுக்கடுக்கான சிறந்த திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்துவதன் மூலமாக தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்கிட இயலும் என்பதற்கேற்ப, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் உள்ளத்தில் உதித்த உன்னதத் திட்டமே புதுமைப் பெண் திட்டமாகும். (மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் ) இத்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த 2.73 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு, மாதம் ரூ.1,000/ உதவித் தொகை வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 9,050 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்.
என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார். பயனாளிகள் நன்றி தஞ்சாவூர் மாவட்டம், அயோத்தியாப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி ரெ.கார்த்திகா தெரிவித்ததாவது:- குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்திய மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகின்றேன். எனது பெற்றோர்கள் விவசாயக் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் வழங்கிய ரூபாய் ஆயிரம் என் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. முதல் முறை திட்டத்தின் கீழ் வழங்கிய ஆயிரம் ரூபாய் என்னுடைய தேர்வுக் கட்டணத்திற்காக பயன்படுத்திக் கொண்டேன். இந்தத் தொகையானது எனது குடும்ப வாழ்வாதார பெரும் சுமையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பெண் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது குடும்பத்தார் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகள்" என்றார். இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி விக்னேஸ்வரி தெரிவித்ததாவது:- நான் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன் . ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் பயின்றேன். எனது தந்தை பேராவூரணியில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அம்மா தினக்கூலியாக வேலை செய்கிறார்கள். நானும் எனது தங்கை என என் குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் எங்கள் வீட்டில் எங்களை படிக்க வைக்க பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எங்களைப் போன்ற பல்வேறு குடும்பங்களின் சிரமங்களை போக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 எனக்கு மாதம் தோறும் கிடைக்கிறது இப்பணமானது என்னுடைய படிப்பிற்கு பெரிய உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், எனது குடும்பத்தின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். இவ்வாறு புதுமைப் பெண் திட்டம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.