இதுதான் எனக்கு கடைசி தேர்தல் - பாஜக வேட்பாளர் உருக்கம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் பங்கேற்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வேலூரில் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வேலூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதாவின் வேட்பாளரும், புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வேலூர் தொகுதியை வெற்றி தொகுதியாக பா.ம.க. சொந்தங்கள் மாற்ற வேண்டும்.நேற்று நடந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்கள் இருவரும் தேர்தலையொட்டி வேலூருக்கு பிரசாரத்திற்காக வர உள்ளனர். நான் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தேன்.
ஊருக்கு போனவங்கள வரவழைத்தோ அல்லது தூங்கினு இருந்தவங்கள அழைச்சினு வந்தோ நீங்கள் ஒரு வாக்கு சாவடிக்கு இரண்டு வாக்கு பெற்றுக் கொடுத்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஆனா விட்டுவிட்டீங்க. நான் 2016-ம் ஆண்டு 2019-ம் ஆண்டு என இரு முறை தேர்தலில் நின்றேன். 2019 -ம் ஆண்டு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டேன். தற்போது 4-வது முறையாக போட்டியிடுகிறேன். "இதுவே எனது கடைசி தேர்தல் ஆகும்". நீங்கள் ரூ.100-க்கு உழைப்பு கொடுத்தால் நான் திருப்பி ரூ.1000-க்கு உழைப்பை தருவேன். நமது கூட்டணி வலுவான மற்றும் சக்தி வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
பா.ம.க. இந்தக் கூட்டணியில் இணைந்தது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தான் நான் நன்றாக தூங்கினேன். நான் இந்த தொகுதியில் ஏராளமானவர்களுக்கு மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளித்துள்ளேன். மேலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தந்துள்ளேன். இத்தேர்தலில் சமூக நீதிக்காக வலுவான படைகள் ஒன்றிணைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.