குன்னூரில் வீட்டுற்குள் புகுந்த சிறுத்தை வெளியேறியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ரேஞ்ச், குரூப் லேண்ட் பகுதியில் காப்பு காட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவில் இருந்த பங்களாவுக்குள் நேற்று அதிகாலையில் சிறுத்தை ஒன்று நாயை விரட்டிக்கொண்டு வந்ததில் உள்ளே நுழைந்தது. உடனடியாக தகவல் வனவருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சிறுத்தை அவர்களை தாக்கியது. உடனடியாக வனப்பணியாளர்கள் மற்றும் ஆர்ஆர்டி குழுவுடன் வீட்டிற்குள் சென்று காயமடைந்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்கள். பின்பு கள இயக்குனர், வெங்கடேஷ், துணை இயக்குனர், அருண்குமார் மற்றும் கால்நடை மருத்துவர், ராஜேஷ்குமார் ஆகியோர் குன்னூர் ரேஞ்சர் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து அந்த வீட்டைச் சுற்றி யாரும் செல்லாதவாறு பாதுகாக்கப்பட்டது. சிறுத்தை வீட்டிற்குள் எங்கே இருக்கிறது என்பதை அறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு ஸ்டோர் ரூமில் சிறுத்தை பதுங்கி இருப்பதை ஓட்டை பிரித்து பார்க்கும்போது தெரிந்ததுள்ளது. நேற்று தீபாவளி என்பதால் அதிக பட்டாசுகள் அந்த பகுதிகளில் வெடிக்கப்பட்டது. அந்த சத்தத்தை கண்டு சிறுத்தை அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. எனவே சிறுத்தை இருந்த ரூமிற்கு வெளியே மற்றும் வீட்டிற்கு வெளியே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கபட்டது. அனைத்து கதவுகளையும் திறந்து வைக்கப்பட்டு எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் அப்படியே இரவு வரை விடப்பட்டது. இரவு 11 மணி அளவில் சிறுத்தை தானாகவே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டது. சிறுத்தை வீட்டுக்குள் இருந்த ஸ்டோர் அறையில் இருந்து வெளியேறும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. இன்று காலை கால்நடை மருத்துவர், ரேஞ்சர் மற்றும் தாசில்தார் ஆகியோர்கள் வீட்டிற்குள் சென்று அனைத்து அறைகளைக்கும் ஆய்வு செய்தனர். பின்னர் சிறுத்தை வெளியேறியதை அவர்கள் உறுதி செய்தனர்.