பைக் மீது லாரி மோதிய விபத்தில் பதநீர் வியாபாரி பலி
திருநெல்வேலி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே மோட்டார் பைக் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பதநீர் வியாபாரி பரிதாபமாக பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், சேந்தமங்கலம் வேலப்பநகர் பகுதியை சேர்ந்த திருமால் மகன் நாராயணசாமி (62). பதநீர் வியாபாரி. இவர், தினமும் கழுகுமலை, கயத்தாறு, கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று நுங்கு, பதநீர் விற்பனை செய்து வந்தார். நேற்று மாலையில் எட்டயபுரத்தில் தனது வியாபாரத்தை முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி வழியாக சேந்தமங்கலம் சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் சிதம்பராபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும்போது, எதிரே கேரளாவில் இருந்து தூத்துக்குடியை நோக்கி சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் செக்காலிவலையை சேர்ந்த சுரேந்திரன் மகன் சச்சின் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.