புதிய காற்றழுத்தம் 3 நாளில் உருவாகிறது; 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 3 நாளில் உருவாக உள்ளது.
வட தமிழகத்தின் கரையை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 3 நாளில் உருவாக உள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது. பின்னர் சில மணி நேரங்களில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்தது. இது அரபிக்கடல் பகுதிக்கு சென்று விடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்தாலும் அதன் ஈரப்பதம் ஆங்காங்கே காணப்படும். இதன் காரணமாக தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (28-ந்தேதி) மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வருகிற 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 3 நாட்களில் அது மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கை நோக்கி நகரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.