தொட்டபெட்டா செல்ல ஒரு வாரம் தடை - வனத்துறை
ஊட்டி தொட்டபெட்டா வனத்துறை சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் சுங்கச்சாவடி இடம் மாற்றியமைக்கபடுவதால் நாளை (வியாழக்கிழமை) முதல் 7 நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே மிக உயரமான மலைச் சிகரமாக, கடல் மட்டத்தில் இருந்து 2,623 மீ., உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, மாநில எல்லைகள், அணைகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் வாகனங்கள் சோதனைச்சாவடியில், கட்டணம் செலுத்திய பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. அங்கு கட்டணம் செலுத்த காத்திருப்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பிற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தாமதம் ஆகிறது. இதை கருத்தில் கொண்டு வனத்துறை சார்பில் தொட்டபெட்டா சோதனைச்சாவடியில் பாஸ்ட் டேக் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இதன்படி தொட்டபெட்டாவில் வனத்துறை சோதனைச்சாவடியை தொட்டபெட்டா சூழல் சுற்றுலா குழு பராமரித்து வருகிறது. அதிக சுற்றுலா பயணிகள் வரும்போது, நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது போல், இங்கு வாகனம் வந்தவுடன் பாஸ்ட் டேக் மூலம் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் சோதனைச்சாவடியில் நிற்க வேண்டியதில்லை. தமிழக வனத்துறையில் முதன் முறையாக இந்த திட்டம் ஊட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தொட்டபெட்டா சந்திப்பில் மூன்று சாலைகள் இருக்கின்றன. நுழைவு கட்டணம் வசூலிக்க வாகனங்கள் நீண்ட தூரம் அதுவும் வளைவுகளில் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து நீலகிரி போலீஸார் பாஸ்ட் டேக் இருப்பிடத்தை மாற்றியமைக்க கோரி வேண்டுகோள் விடுத்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினர் பாஸ்ட் ஸ்டாக் இருக்கும் இடத்தை ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர் இந்த பணி (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 22 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெற உள்ளதால், அதுவரை தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே பைகாரா படகு இல்லத்திற்கு செல்லும் சாலையை சீரமைப்பு பணிக்காக பைகாரா படகு இல்லம் மூடப்பட்டது. 15 நாட்களில் பணி முடியும் என்று கூறி ஒரு மாதமாகியும் பணி முடியவில்லை. இதுவரை பைக்காரா படகு இல்லம் திறக்கப்படவில்லை. தினசரி ரூ.3 லட்சம் வருமான இழப்பு சுற்றுலாக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. தற்போது தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலையையும் ஒரு வாரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில் பணிகள் முடியாவிட்டால் மேலும் தாமதமாகும். வருடத்தில் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும்தான் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். எனவே அந்த நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் இந்த பணிகளை செய்யாமல் சீஸன் நேரத்தில் செய்வது கடும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.