யுஜிசியின் புதிய விதிகளை கண்டித்து நாளை மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!
யுஜிசியின் புதிய விதிமுறைகளை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நாளை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுதல் குழுவை கவர்னரே நியமிக்கும் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரியில் இன்று காலை இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். கிளை தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். அப்போது யுஜிசி புதிய வழிகாட்டுதல் அறிவிப்பு நகலை மாணவர்கள் தீயிட்டு எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், யுஜிசியின் புதிய விதிமுறைகளை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நாளை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.