பூரண மதுவிலக்கை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மது கடைகளை படிப்படியாக மூடுவதற்கான சரியான தருணமாகும். மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மதுவில்லா தமிழகத்தை செயல்படுத்த வேண்டும் என்று 2015-ம் ஆண்டு எனது தலைமையில் ஒரு கோடி கையெழுத்து பெற பட்டது. அதை நான் தற்போது நினைவு கூற விரும்புகிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்து வருகிறது. இதற்கு டாஸ்மார்க், போதை பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து உள்ளனர். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் விதத்தில் அக்டோபர் 2-ந்தேதி முதல் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நிபா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தடுக்க தமிழக சுகாதாரத்துறையும் குமரி மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமங்கள், நகரங்களில் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காப்பீடு திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியதாகும். தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்காளர்களை ஏமாற்றி வருகிறார்கள். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களை அழைத்து மாநாடு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. புதிராக உள்ளது. எல்லா கட்சிகளுக்குமே கூட்டணி மற்றும் ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதை வெளிப்படையாக கூற தயங்குகிறார்கள். அது கூட்டணி கட்சியின் மீது உள்ள மரியாதையா, பயமா என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.