ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கணும் -டிடிவி தினகரன்

பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-05-23 04:24 GMT

பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் , ஆவின் நிர்வாகத்தின் பால் கொள்முதலின் அளவு தொடர் வீழ்ச்சியால் பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கும் அபாயம் – நடைமுறைச் சிக்கல்களை களைந்து பால் கொள்முதலை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிர்வாகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 40 லட்சத்திலிருந்து 27 லட்சமாக குறைந்திருப்பதாகவும், அதனால் ஆவினில் தயாரிக்கப்படும் பால் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கலப்பட புகார்கள், எடை குறைவு, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம் என ஆவின் நிர்வாகத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த குளறுபடிகளே, அந்நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் 4.80லட்சத்திலிருந்து 3.75 லட்சமாக குறைய முக்கிய காரணம் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கொள்முதல் செய்யும் பாலுக்கு நியாயமான தொகையை வழங்கவோ, மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், இனியும் ஆவினையும், அரசையும் நம்பி பலனில்லை எனக்கருதி தனியார் பால் நிறுவனங்களை வரவேற்கும் சூழலுக்கு பால் உற்பத்தியாளர்களும், பால் முகவர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்ற வகையில் நடைமுறைக் கொள்கைகளை மாற்றியமைத்து பால் கொள்முதல் அளவை உயர்த்துவதோடு, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தங்குதடையின்றி தொடர்வதை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News