விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி

நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் விஜயகாந்த் அவர்களுக்கு பெரிய பங்கு உள்ளது. அதற்கான மரியாதையை நிச்சயம் செய்ய வேண்டும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-06 13:06 GMT

சென்னை கோயம்பேட்டில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து நினைவிடத்தில் 2 நிமிடம் அமர்ந்து கண்ணீர் மல்க விஜயகாந்தை நினைவுகூர்ந்தார். பின்னர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி , சிவக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா பேசுகையில்,  அண்ணனின் பிரிவு மிகவும் துயரமானது. மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஆரம்பத்தில் 4,5 படங்கள் நடித்து பெரிய அளவில் எனக்கு பாராட்டு கிடைக்கவில்லை. பின் பெரியண்ணா என்ற படம் அவரோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அவரோடு சேர்ந்து பணியாற்றிய முதல் நாளே சகோதரன் என்ற அன்போடு என்னை சாப்பிட அழைத்தார். அப்பொழுது நான் அசைவம் சாப்பிடாமல் அப்பாவுக்காக வேண்டுதலில் இருந்தேன். என்னை உரிமையாக திட்டி அவர் தட்டில் இருந்து எடுத்து என்னை சாப்பிட வைத்தார்.


நடிப்பவர்களுக்கு உடலில் சக்தி வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தி என்னை சாப்பிட வைத்தார்.  அவர் தட்டில் இருந்து எடுத்து ஊட்டி விட்டார். அவரோடு பணியாற்றிய நாட்களில் அவரை பிரமிப்பாக பார்த்து உள்ளேன். நட்சத்திரங்கள் என்றாலே விலகி இருப்பார்கள் ஆனால் அவரை அனைவரும் எளிமையாக அணுக முடியும். அவர் செய்த துணிச்சலை பார்த்து அசந்து போய் உள்ளேன்.

அவரை மீண்டும் சந்தித்து நேரில் அமர்ந்து பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. அவரைப் போல் இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவரின் முகத்தை பார்க்க முடியவில்லை என்பது பெரிய இழப்பு. அவரின் குடும்பத்தார் சொந்தங்கள் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

சிலை, மணிமண்டபம், நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது தொடர்பான கேள்விக்கு, அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தால் எனக்கு சந்தோஷம். நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரிய பங்கு உள்ளது. அதற்கான மரியாதையை நிச்சயம் செய்ய வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News