தவெக கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் வருவாரா..? - புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்த தகவலுக்கு விஜய் தரப்பில் விளக்கம்

Update: 2024-02-24 07:29 GMT
தவெக கட்சியை தொடங்கிய விஜய்

விஜய் தான் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஹீரோவாக அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். குழந்தைகள் முதல் இளைஞர் வரை நடிப்பால் கவர்ந்த விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு கடந்த சில ஆண்டுகளாகவே அடிப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருந்த கடந்த 2ம் தேதி தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாகவும், 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்தார். 

விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், பிற அரசியல் கட்சிகளுக்கு சற்று கலக்கத்தையே கொடுத்துள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிகவின் பலம் குறைந்து இருப்பதாகவும் அதற்கு மாற்று கட்சியாக விஜய் வந்துள்ளதாகவும் கூட பேச்சுகள் அடிப்படுகிறது. கட்சி பெயரை அறிவித்த விஜய், அதோடு நிறுத்திடாமல் அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கட்சிக்கு என தனி சின்னம், கொடி உள்ளிட்டவற்றை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 

இதற்கிடையே சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடத்திய விஜய், 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கட்சி பெயரை அறிவித்தத்துடன், விஜய் பங்கேற்கும் பிரமாண்ட  மாநாடு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

விஜய் வந்து பேசும் பிரமாண்ட மாநாட்டிற்காக ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் காத்திருக்கும் நிலையில், முதல் மாநாடு எங்கு நடைபெறும் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு விஜய்யின் முதல் டார்கெட் தூங்கா நகரமான மதுரை தான் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.   இயல், இசை, நாடகம் என முத்தமிழ் வளர்த்த பெறுமையும், ஆன்மீக தளமாகவும் விளங்கும் மதுரை மண்ணில் விஜய்யின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாகவும். இதற்கு பின்னணியில் வேறு சில காரணங்களும் கூறப்படுகிறது. அரசியல் தலைவர்கள் தங்கள் முதல் பணியை தொடங்க சென்டிமென்டாக பார்க்கப்படும் ஒரு பகுதி தான் மதுரை. உதாரணமாக 1950ம் ஆண்டு எம்ஜிஆர் முதன் முதலாக ரசிகர்கள் மன்றம் மதுரையில் தான் தொடங்கப்பட்டது. அங்கிருந்து தான் அண்ணாவின் அரசியல் கொள்கைகளை எம்ஜிஆர் பிரகடனபடுத்தி அரசியலில் வளர்ந்தார். 1973ம் ஆண்டு தனது கட்சியின் முதல் வேட்பாளரை எம்ஜிஆர் அறிவித்ததும் மதுரையில் தான். அந்த இடைத்தேர்தலில் மதுரை மண்ணில் தான் இரட்டை இலை சின்னமும் உதயமானது. அதிமுகவின் முதல் வெற்றியும் மதுரை மண்ணில் தான் எழுதப்பட்டது. 

எம்ஜிஆரை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆசை வந்ததும் மதுரை மண்ணில் தான். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது மதுரையில் ஐந்தாவது உலக மாநாடு நடந்தது. அப்போது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வரவேற்பே அவரது அரசியல் பயணத்துக்கு முதல் படியாக இருந்தது. 

எம்ஜிஆர் ஜெயலலிதா மட்டுமின்றி திமுகவுக்கு மதுரை ராசியான மண்ணாகவே அமைந்தது. 1980ம் ஆண்டு மதுரை ஜான்சி பூங்காவில் இருந்தபடி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி உருவானது. அதன்பிறகு திமுகவில் வளர்ந்த ஸ்டாலின் தற்போது முதலமைச்சராக உள்ளார். அதிமுக, திமுக மட்டுமில்லாமல், இரு கட்சிக்கும் மாற்று கட்சியாக வந்த விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியை தொடங்கியதும் மதுரை திருப்பரங்குன்றத்தில் தான். விஜயகாந்தை தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் மதுரையில் இருந்து தான் உதயமானது. 

ஜெயலலிதாவும் மறைவுக்கு பிறகு ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை ஏற்ற எடப்பாடி பழனிசாமி தனது முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியதும் மதுரை மண்ணில் தான். இப்படி அரசியல் தலைவர்களின் ராசியான மண்ணாக இருக்கும் மதுரை தான் விஜய்யின் டார்கெட்டாக உள்ளது என்றும், முதல் மாநாடு பெயர் பெற்ற மதுரை மண்ணில் தான் இருக்க வேண்டும் என விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்த வதந்திக்கு புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.  கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் ” என கூறியுள்ளார்.

Tags:    

Similar News