பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவனையில் அனுமதி
பல்வேறு முறைகேடு புகார்களில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர் மீது பல்வேறு முறைகேடு புகார் கூறப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் நள்ளிரவு சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தினேஷ்குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதாவது ஒரு வாரத்திற்கு சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் தினமும் காலையில் வந்து கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனின் வீடு மற்றும் அலுவலகம் உள்பட 7 இடங்களில் நேற்று மாலை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக சேலத்தில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் துணைவேந்தர் ஜெகநாதன் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.