தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக ஆா். சிவசாமி வேலுமணி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக  ஆா். சிவசாமி வேலுமணி  அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ;

Update: 2024-03-21 01:34 GMT

ஆா். சிவசாமி வேலுமணி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னா் 3 தோ்தல்களை சந்தித்துள்ளது. கடந்த 2009 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா். ஜெயதுரை வெற்றி பெற்றாா். பின்னா் 2014 இல் அதிமுகவைச் சோ்ந்த ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டா்ஜி வெற்றி பெற்றாா். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் தூத்துக்குடி தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.  ஏனென்றால் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு, தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட்டாா். திமுக சாா்பில் கனிமொழி போட்டியிட்டாா். இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட கனிமொழி, பாஜக சாா்பில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜனை விட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். தற்போதைய மக்களவைத் தோ்தலில் (2024) திமுக வேட்பாளராக மீண்டும் கனிமொழி போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த பல் மருத்துவா் ஜா.ரொவினா ரூத் ஜேன் போட்டியிடுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அதிமுக வேட்பாளர் பெயர் இன்று வெளியாக உள்ளது. இதில், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவா் இரா.சுதாகா், முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோா் பெயரும் உள்ளதாக கட்சியினா் தெரிவிக்கின்றனா். ஆனால்  அதிமுக சாா்பில் வேட்பாளராக ஆா். சிவசாமி வேலுமணி அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் தி.நகா் பகுதிச் செயலரும், தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனின் உடன் பிறந்த சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெயரே அதிமுக வேட்பாளர் தேர்வில் முதலிடத்தில் இருப்பதாக கட்சியினர் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
Tags:    

Similar News