சென்னை ஐஐடியில் ஜூலையில் ஏஐ படிப்பு தொடக்கம்: இயக்குநர் காமகோடி

தஞ்சாவூர் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது

Update: 2024-03-11 13:36 GMT

மாணவிக்கு பட்டம் வழங்கல்

சென்னை ஐஐடி-இல் ஏஐ அன்ட் டேட்டா அனாலிட்டிக்ஸ் என்கிற புதிய படிப்பு வருகிற ஜூலை மாதத்தில் தொடங்கப்படவுள்ளது என்றார் அதன் இயக்குநர் வி. காமகோடி. தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது,

உலகிலேயே 15 - 35 வயதுக்கு உள்பட்ட இளைய சமுதாயத்தினர் அதிகமாகக் கொண்ட நாடு இந்தியா தான். இவர்களுக்கு கல்வி சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கல்வியறிவு அற்ற நாடாக இந்தியா மாறிவிடும். குறிப்பாக, கிராமப்புறம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இளைஞர்களிடம் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டிய மிகப் பெரிய கடமை நமக்கு உள்ளது.

இதைச் செய்தால்  வளர்ச்சியடைந்த பாரதம் என்கிற நிலையை எட்ட முடியும். சென்னை ஐஐடி-இல் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டை பரிசோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஐஐடி-இல் பி.டெக். படிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். இவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தகுதி பெற்று ஏதோ ஒரு தர வரிசையில் இருந்தால் போதும். தேசிய அளவில் ஒரு பதக்கம் அல்லது சர்வதேச போட்டியில் பங்கேற்பு இருந்தால், சென்னை ஐஐடி-இல் சேர விண்ணப்பிக்கலாம்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) போன்ற படிப்புகள் பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன.  இதில், செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளதுடன், அது பல துறைகளில் வந்துள்ளது. எனவே, உலகிலேயே முதல் முறையாக சென்னை ஐஐடி-இல் ஏஐ அன்ட் டேட்டா அனாலிட்டிக்ஸ் என்கிற படிப்பு வருகிற கல்வியாண்டில் ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளது. 

இதற்கு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறும். சிறந்த பாடத்திட்டங்களுடன் வேறு எங்கும் இப்படிப்பு நடத்தப்படவில்லை. இப்படிப்பு வேலைவாய்ப்புக்கும், ஆராய்ச்சிக்கும், ஸ்டார்ட் அப் திட்டத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வளர்ச்சியடைந்த பாரதம்  என்கிற கனவு நனவாக மாணவர்கள் தொழிலாளிகளாவதை விட முதலாளிகளாக மாற வேண்டும். எனவே, சென்னை ஐஐடி-இல் ஸ்டார்ட் அப் திட்டத்தில் தொழில்களைத் தொடங்குமாறு மாணவர்களிடம் அறிவுறுத்தி வருகிறோம்.  மேலும், மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளைப் பாதுகாக்கும் விதமாக காப்புரிமைப் பெற்றுத் தரப்படுகிறது. சென்னை ஐஐடி-இல் இதுவரை 366 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப் திட்டத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகப் பாடத்திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருகிறோம்.  இதன் மூலம், மாணவர்களிடையே படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்வதை விட தொழில் தொடங்கும் ஆசை அதிகரித்து வருகிறது"

என்றார் காமகோடி. முன்னதாக, 300 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் விமூர்த்தானந்த மகராஜ், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் வாழ்த்துரையாற்றினர்.

மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ், மூத்த வழக்குரைஞர் சுப்பிரமணியன், விஞ்ஞானிகள் அப்துல் ரஹ்மான், ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News