தூத்துக்குடியில் ரூ.4000 கோடி முதலீட்டில் மின் வாகன உற்பத்தி ஆலை : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்குநபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
Update: 2024-02-25 09:22 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.02.2024) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில், வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்/பாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை, முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மின்வாகன உற்பத்தி ஆலையாக அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம், தென் தமிழ்நாட்டில் வாகன உற்பத்திக்கான முதலாவது பெரிய முதலீடு என்பதும், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாட்களுக்குள் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டன் மூலம், "இந்தியாவின் ஆட்டோ ஹப்" மற்றும் "இந்தியாவின் EV தலைநகரம்" ஆக விளங்கும் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தும். தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவையான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கடந்த மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அம்மாநாட்டின்போது, 6,64,180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில், உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன், முன்னெப்போதும் இல்லாத சாதனையாக 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தமிழ்நாடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கினை அடைவதற்கான தொலைநோக்கு ஆவணத்தையும் முதலமைச்சர் வெளியிட்டார். வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட்(VinFast Auto Limiடெட்) மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வின்/பாஸ்ட் ஆட்டோ லிமிடெட், 7 வகையான மின் சீருந்துகளையும், 5 வகையான மின் ஸ்கூட்டர்களையும், 2 வகையான மின் பேருந்துகளையும் தயாரித்து வருகின்றது. இந்நிறுவனம். உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் போது, தமிழ்நாட்டில் மின் வாகன உற்பத்தியில் நீண்ட கால முதலீடாக 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.16,000 கோடி) முதலீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, வின்/பாஸ்ட் ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் (VinFast Auto India Private Ltd) மூலம் தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்- சில்லாநத்தம் தொழிற்பூங்காவில் 16,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார். இந்த ஆலை, ஆண்டொன்றுக்கு 1,50,000 வாகன உற்பத்தி திறன் கொண்டதாக அமையவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாட்களுக்குள் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றிருப்பது, மாநிலத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு மிகவும் உகந்த சூழமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதற்கும், தொழில்முனைவோருக்கு தேவையான அனைத்து ஆதரவு சேவைகளையும் விரைவாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகநலம் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மீன்வளம் அமைச்சர் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகையா, ஜி.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி செ. அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி, வின்/பாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பாம் சான்ஹ் சௌ, துணை தலைமைச் செயல் அலுவலர்கள் ஹோங் காங் தாங், நுகென் டாங் குவாங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.