சென்னையில் ஓராண்டு தேவை குடிநீரை ஒரே நாளில் வீணாக கடலுக்கு அனுப்பும் அவலம்: அன்புமணி இராமதாஸ்
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீர் வருவதால் அணைக்கு வரும் தண்ணீரை விட கூடுதலாக வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 15 டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. காவிரி நீர் இந்த அளவுக்கு வீணடிக்கப்படுவது கண்ணீரை வரவழைக்கிறது.
சென்னையின் குடிநீர் தேவைக்கு ஓர் ஆண்டுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு -15 டி.எம்,.சி சென்னைக்கு ஓராண்டுக்குத் தேவையான தண்ணீரை ஒரே நாளில் வீணாக்குகிறது தமிழக அரசு.
தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு - 2 டி.எம்.சி இந்த நீரை வெறும் 3 மணி நேரத்தில் வீணாக்குகிறது தமிழக அரசு. மேட்டூர் உபரி நீர் திட்டத்திற்கு ( மேட்டூர் - சரபங்கா) தேவைப்படும் தண்ணீரின் அளவு - 0.555 டி.எம்.சி. இந்த நீரை வெறும் 50 நிமிடங்களில் வீணாக்குகிறது தமிழக அரசு. அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு தேவையான தண்ணீரின் அளவு - 1.5 டி.எம்.சி. இந்த நீரை வெறும் இரண்டே கால் மணி நேரத்தில் வீணாக்குகிறது தமிழக அரசு.
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தேவையான தண்ணீரின் அளவு - 6.30 டி.எம்.சி இந்த நீரை வெறும் 10 மணி நேரத்தில் வீணாக்குகிறது தமிழக அரசு.
மேட்டூர் அணைக்கு வெள்ளக் காலங்களில் வரும் கூடுதல் நீரை ஓரளவாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் குறுக்கே 10 கி.மீக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்வதற்கு மாறாக 10 கி.மீக்கு ஒரு மணல் குவாரியை அமைத்து வருகிறது தமிழக அரசு.
தமிழக அரசு எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது? எப்போது தடுப்பணைகளை கட்டப் போகிறது?'' என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.