ஆந்திர எம்.பி., மகள் ஜாமினில் விடுவிப்பு!

Update: 2024-06-19 05:21 GMT

பீடா மாதுரி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த வழக்கில் ஆந்திரா எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் நடைமேடையில் படுத்திருந்த சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பெசன்ட் நகர் சாலையோர நடைபாதையில் படுத்திருந்தார். இவர் மது அருந்திவிட்டு போதையில் படுத்து உறங்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் சூர்யா மீது ஏறி இறங்கியது. இதில், அவர் படுகாயம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சூர்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பெண்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய பயத்தில் காரை ஓட்டிய பெண் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காரில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய மக்களிடம் இறங்கி வந்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர், அவரும் அங்கிருந்து சென்றுள்ளார். 

இதனிடையே காருடன் தப்பிச் சென்ற இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், பெசண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த பீடா மாதுரி (32) என்பவர் தான் காரை ஓட்டி வந்தது என தெரியவந்தது. மேலும், அவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி பீடா மஸ்தான் ராவின் மகள் எனவும் தெரியவந்தது.

இதனையடுத்து, பீடா மாதுரி மீது விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் காரில் வந்த மற்றொரு பெண் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, இது பிணையில் வரக்கூடிய சட்டப்பிரிவு என்பதால் காவல் நிலைய பிணையில் பீடா மாதுரி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News