லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய சார்பதிவாளர் - கொட்டாரத்தில் பரபரப்பு

கொட்டாரம் சார் பதிவாளர் அலுவகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் பொறுப்பு சார்பதிவாளர் உட்பட இருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Update: 2024-05-31 07:34 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பணம் 

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில்  நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜான் பெஞ்சமின், சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.       இரவு 9 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ் (வயது 32) என்பவரை பிடித்து அவரிடம் சோதனை செய்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.      மேலும் அங்கிருந்த அலுவலக உதவியாளர் மோகன் பாபுவிடம் இருந்தும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவரிடமும் சுமார் 3½ மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்ரோஸ் செல்போனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது பல தகவல்கள் சிக்கி உள்ளது. மேலும் 2 ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.      

சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ், உதவியாளர் மோகன் பாபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்ரோஸ் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது நாகர்கோவிலில் தங்கி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் இருந்த போதும் பொறுப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது ஏன் என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News