அம்பத்தூரில் காவலர்களை தாக்கிய சம்பவம்: 28 பேர் கைது
அம்பத்தூர் அருகே மதுபோதையில் காவலர்களை தாக்கிய வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
அம்பத்தூர் அருகே பட்டறைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஆயுதபூஜை அன்று அங்கு பணியாற்றியவர்களுடன், அவர்களது நண்பர்களும் சேர்ந்து மதுபோதையில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ரோந்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இரு தரப்பினையும் சமாதானம் செய்துள்ளனர். அப்போது, அவர்களை வட மாநிலத்தவர் தாக்கியதில், இரு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி இருந்துள்ளனர். தகவல் அறிந்து காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பிஹாரைச் சேர்ந்த ராம்ஜித் ராஜ்பன்சி (46), பிலாஸ்தாஸ் (43), ராசுகான் குமார் (22), சுராஜ் குமார் (18), பிண்டி ராஜ்வான்சி (31) ஆகிய 5 பேரை காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 28 வட மாநிலத்தவர்களை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.