பறவை காய்ச்சல் எதிரொலி - கோழிகள் கொண்டுவர தடை
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்திற்கு கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தாக்கி ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் இறந்தன. கேரள அரசு பறவைக் காய்ச்சலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்தி உள்ளது. கேரளாவில் உள்ள பண்ணைகளில் உள்ள வாத்துகளை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. நீலகிரி மாவட்டம், கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ளதால் கால்நடை துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.கேரள - நீலகிரி எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோழிகள் உள்ளிட்ட பறவை இனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீலகிரி கால்நடை துறை இணை இயக்குநர் சத்தியநாராயணன் கூறியதாவது: நீலகிரி எல்லையில் கேரளாவிற்கு செல்லும் 8 சோதனை சாவடிகள் உள்ளன.இந்த எட்டு சாலைகளில் உள்ள சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் ஆகிய 3 பேர் அடங்கிய குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இதன்படி 8 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளித்த பிறகுதான் வாகனங்கள் நீலகிரி அனுமதிக்கப்படும்.
அதே வேளையில் கோழிகள் வாத்துகள் உள்ளிட்ட பறவை இனங்கள் மற்றும் கோழி எச்சம் மற்றும் கழிவுகள் கொண்டு நீலகிரிக்கு நுழைய அனுமதி கிடையாது அந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும்.பறவை காய்ச்சல் கிருமிகள் 90 நாட்களுக்கு பிறகுதான் அழியும் என்பதால் இந்த கண்காணிப்பு தொடர்ந்து 90 நாட்கள் இருக்கும். அதே வேளையில் பாதிப்பு அதிகமாக இருந்தால் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.