போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு!

ஊட்டியில் ரயில்வே போலீஸார் சுற்றுலா பயணிகளுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-06-26 15:11 GMT

ஊட்டியில் ரயில்வே போலீஸார் சுற்றுலா பயணிகளுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


ஆண்டு தோறும் ஜூன் 26-ம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில், ரயில்வே போலீஸார் ஊட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது சுற்றுலா பயணிகள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:- உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடிப் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மது மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், கஞ்சா, அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகிறது.

கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்க வேண்டிய இளமைப் பருவத்தில், நரம்பு தளர்ந்து, உடல் சோர்ந்து போய்க் கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? தனி நபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன், சமூகத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன இந்த போதைப் பொருட்கள். இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது என்ற சூழலில் தற்கொலைகளில் போய் முடிகின்றன. உலகளாவிய ரீதியில் போதைப் பொருள் பயன்படுத்தல், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும்கூட, போதைப்பொருளை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை. போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளிலிருந்து மனிதர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு தேவையான ஏற்பாடுகளை சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகன் வினோத் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News