நெருங்குது பக்ரீத் - குந்தாரப்பள்ளியில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கிருஷ்ணகிரி அருகே புகழ் பெற்ற குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள்,பொதுமக்கள் குவிந்தனர்.
நாடு முழுவதும் வருகின்ற 17ஆம் தேதி இஸ்லாமிய மக்களின் தியாகத் திருநாளாக போற்றக்கூடிய பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு ஆட்டு இறைச்சியாகவும் அன்னதானமாக வழங்கி வருகின்றனர். இதற்காக ஆடுகள் வாங்குவதில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தைக்கு இன்று கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, என்று சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வந்தது. ஆடுகளை வாங்க தமிழகத்தில் சேலம், கோவை, விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, ஈரோடு, மேச்சேரி, ஓமலூர் மற்றும் கர்நாடகா ஆந்திரா போன்ற பல்வேறு இடங்களில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள்,பொதுமக்கள் குவிந்தனர்.
காலை 5 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 15 கிலோ எடை கொண்ட பெண் ஆடு அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய்க்கும், 15 கிலோ எடை கொண்ட கிடா எனப்படும் ஆண் ஆடு அதிகபட்சமாக 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. பல்வேறு பகுதியில் இருந்து வந்த இஸ்லாமிய மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கிச் சென்றனர் வழக்கத்தைவிட பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விலை சற்று அதிகரித்து இருப்பதால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விலை அதிகரித்து வந்தாலும் பக்ரீத் பண்டிகை நாளில் இஸ்லாமிய தியாகத்தை போற்றும் வகையில் ஆடுகள் பலியிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தால் இஸ்லாமியர் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். மேலும் ஆடுகளின் விலை அதிகரித்து காணப்படுவதால் ஆட்டு இறைச்சியில் விளையும் 900 ரூபாய் வரை இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விறுவிறுப்பாக களைகட்டி நடந்து வரும் இந்த ஆட்டுச் சந்தையில் இன்று மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.