பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை - ஜவாஹிருல்லா கோரிக்கை
மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்தார்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவருடைய பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும். இனி அவர் தேர்தலில் போட்டியிடாத வகையில் தடை விதிக்க வேண்டும் ,பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது.எனவே தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி அடைய கடந்த 45 நாட்களாக சட்டமன்ற அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வேண்டும். என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.