''வெற்றியை கொண்டாட தயாராக இருங்கள்'' - அண்ணாமலை !
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன்- 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளன.
இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு, பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, ''ஜூன் 4ம் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாடத் தயாராக இருங்கள். பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம். தேர்தல் முடிவுக்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது. ஒரு தனிமனிதனை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தாலும் இதுவரையில் இல்லாத அளவிற்கு வலிமையாக 3வது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கும். பாஜக மீது எந்தவித குறையும் இல்லை. எனவே வெற்றியைக் கொண்டாட தயாராகுங்கள்.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் நாட்டை எதிர்க்கக்கூடிய ஆதிக்க சக்திகள் அதிகமாகியுள்ளன. பிரதமர் மோடியை குறி வைத்தே கூட்டணி அமைத்திருக்கிறார்கள்" என்றார்.