இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 4பேர் கைது!
வேம்பார் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பாதுகாப்புக்குழும போலீசார், கியூ பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர்கள் கொண்ட காவல்துறையினர் வேம்பார் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த நாட்டுப் படகில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகள் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதனைத் தொடர்ந்து எஸ் நிரோன் என்ற நாட்டுப் படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தாள முத்துநகர், சிலுவை பட்டி, சுனாமி காலனியைச் சேர்ந்த தேவசகாயம் மகன் கெனிஸ்டன் (29), ராமதாஸ் நகர் சுனாமி காலனி ராயப்பன் மகன் பொன்சிஸ் ராஜா 37, குமார் மகன் பனிமயகார்வின் (19), கருப்பசாமி நகர் முருகேசன் மகன் மாதவன் (21) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.