சனாதனத்தால் வந்த தொல்லை - உதயநிதி ஸ்டாலினை நேரில் அழைக்கும் பெங்களூரு நீதிமன்றம்
உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி என விலை பேசிய சாமியார்
சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பி வைத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அவர், ” சிலவற்றை மட்டும் தான் நாம் ஒழிக்க வேண்டும். அதாவது டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்க கூடாது. ஒழித்து கட்ட வேண்டும். அதுபோல தான் சனாதனமும். அதை எதிர்க்க கூடாது, ஒழித்து கட்ட வேண்டும்.
ஏனென்றால் சனாதனம் சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது. சனாதனம் மாற்ற முடியாது, நிலையானது, கேள்வி கேட்க முடியாது என்பார்கள். ஆனால், நாம் அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்று உருவானது தான் திமுக” என்று பேசியிருந்தார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, பாஜகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கொந்தளித்த பாஜகவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் அளித்தனர். சனாதனம் குறித்து தவறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்குஎதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, அயோத்தியை சேர்ந்த சாமியார் என்று கூறப்படும் பரமஹன்ஸ் ஆச்சார்யா, உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு விலை நிர்ணயித்தார். சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசியதாக கூறிய சாமியார், அவரின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை நிர்ணயித்தார். இது தொடர்பாக வீடியோவை வெளியிட்ட சாமியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையைச் சீவினால் ரூ. 10 கோடி என அறிவித்தார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து அதை கொளுத்தியும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதேபோல், பெங்களூரு நீதிமன்றத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஸ் என்பவர் அளித்த புகாரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், உதயநிதி தரப்பில் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு நீதிபதி பிரீத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அதற்கான சம்மனை உள்ளூர் போலீஸ் இணை ஆணையர் நேரில் சென்று உதயநிதி ஸ்டாலினிடம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.