நீலகிரியில் பறவைகள் கணக்கெடுப்பு!

நீலகிரி வனக்கோட்டத்தில் அழியும் தருவாயில் உள்ள வுட் பிஜியன், பிப்பிட் போன்ற சுமார் 128 வகையான 5110 பறவைகள் இருப்பது பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Update: 2024-05-11 07:53 GMT

தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதன்படி 2022-23-ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது.

நீர் பறவைகளின் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது. இதில் நீலகிரி லாபிங் திரஸ் உட்பட பல்வேறு அரிய பறவைகள் தென்பட்டன. இந்நிலையில் நில பறவைகளின் கணக்கெடுப்பு நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒருங்கிணைந்த முறையில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. கணக்கெடுப்புக்கு முன்னர் வனப்பகுதிக்குள் கணக்கெடுப்பில் ஈடுபடுவது குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. நீலகிரி வனப்பகுதியில் உள்ள பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது இந்த கணக்கெடுப்பு மூலம் தெரியவந்தது.

இதுகுறித்து நீலகிரி வன கோட்ட அதிகாரி கவுதம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ளதால், நீலகிரி வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வனக்கோட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்பட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதிகளில் உள்ள அணைகள், நீர்நிலைகளில் அரிய வகை பறவைகள், இடம்பெயர்ந்து வரும் பறவைகள், நீலகிரி வாழ் பறவைகளும் காணப்படுகின்றன. நீலகிரி வனக்கோட்டத்தில் 10 ஊரக பகுதிகள், 15 வனம் சார்ந்த பகுதிகள் என 25 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அரசு கலைக்கல்லூரியில் வனவிலங்கு உயிரியல் துறையில் படிக்கும் 40 மாணவ மாணவிகள் மற்றும் வனத்துறையை சார்ந்த 25 குழுக்கள் கலந்து கொண்டன. இந்த பறவைகள் கணக்கெடுப்பு மூலம் 128 வகையான 5110 பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 120 வகைக்கும் மேற்பட்ட 1886 எண்ணிக்கையிலான பறவைகள் இருந்தது.

இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் அதிகபட்சமாக பறவைகள் கெத்தை பகுதிகளில் தென்பட்டன. மேலும் நீலகிரியில் அழியும் நிலையில் உள்ள நீலகிரி வுட் பிஜியன், நீலகிரி பிப்பிட், நீலகிரி பிளை கேட்சர், நீலகிரி சோலை கிளி மற்றும் நீலகிரி லாபிங் திரஷ் ஆகிய பறவைகளும் தென்பட்டன. மேலும் கணக்கெடுப்பில் பல்வேறு வகையான அரிய பறவையினங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. பறவைகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு இந்த கணக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News