முதல்வரிடம கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகி
மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது மனைவி மற்றும் பேரக்குழந்தையுடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 9 மணிக்கு தனி விமான மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இந்த நிலையில் முதல்வரின் தனிப்பட்ட விமான பயணம் என்பதால் கட்சி நிர்வாகிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து முதல்வர் மதுரை விமான நிலையம் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அப்போது பாஜக ஓ பி சி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் என்பவர் மனு ஒன்று அளிக்க முற்பட்டார். அந்த மனுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் போதை மற்றும் கஞ்சா பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளது இதனால் மாணவ மாணவிகள் ஏழைத் தொழிலாளிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகின்றனர் இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை போதை பழக்க வழக்கத்தில் இருந்து காத்திட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த மனுவுடன் சேர்த்து கஞ்சா பட்டலத்தையும் இணைத்து இருப்பதாகவும் தெரிவித்து மனு கொடுக்க முயன்றுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை விமான நிலையம் மற்றும் அவனியாபுரம் போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி முதல் கட்டமாக அவனியாபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடைக்கானல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவதற்க்காக மதுரை வந்த நிலையில் அவரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.