பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்

விளம்பரத்திற்கு பல்லாயிரம் கோடி செலவிடும் தமிழக அரசு, வாக்குறுதியை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என்று காரணம் சொல்வதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-04-09 00:40 GMT

பாஜக மாநில தேர்தல் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறியிருப்பது தமிழகம் முழுவதும், போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு, அன்றைய அதிமுக அரசு, போக்குவரத்துத் துறை ஊழியர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதி அளித்தது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தப் பிரச்சினையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், ஊழியர்கள் பரிதவித்து வருகிறார்கள். இது தொடர்பாகப் பலமுறை வலியுறுத்தியும், போராட்டங்கள் நடத்தியும், கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும், அவர்களின் குறை தீர்க்கப்படவில்லை.

இது குறித்து, தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், 2017 ஆம் ஆண்டு மே 17 அன்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, “போக்குவரத்துத் துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அன்றைய தமிழக அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமாகச் செயல்படுவதாகவும், முதலமைச்சரும், போக்குவரத்துத்துறை அமைச்சரும் விழித்துக் கொண்டிருந்தால், இந்நேரம் பிரச்சினை சுமூகமான முடிவுக்கு வந்திருக்கும் என்றும், அரசாங்கம் தங்களுடைய சொந்த நிதியில் இருந்து பணம் ஒதுக்குவது போல் விளம்பரங்கள் செய்து, அமைச்சரை விட்டு பேட்டி கொடுக்க வைத்து ஊழியர்களை ஏமாற்றி வருவதாகவும், சுமார் 60,000 ஊழியர்கள் இதனால் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்” என்றும் ஒரு நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காக, 2021 தேர்தலின்போது, போலியான வாக்குறுதிகள் கொடுத்து, அனைவரையும் ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்களைக் குறித்து எந்த வித சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திரு. ஸ்டாலின் அவர்கள், இந்த அறிக்கை வெளியிட்டு ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. திமுக ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் முடிந்து விட்டன. தற்போதைய ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை, சுமார் 92,000 பேர். ஆனால், இன்னும் அவர்களுக்கான தீர்வு கிட்டவில்லை. திமுக அரசோ, அல்லது போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சிவசங்கரோ, இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கின்றனர். ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், போக்குவரத்துத் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின்னர் இந்த ஆண்டு ஜனவரி 3 அன்று, அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர். பொங்கல் பண்டிகை நேரத்தில், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத் தலையீட்டுக்கு பிறகு, தற்காலிகமாக, ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றனர். ஆனால் அதன் பின்னர், திமுக அரசு, போக்குவரத்துத் துறை ஊழியர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மட்டுமல்லாது, கல்வியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் என பல தரப்பினரும், நீண்டகாலமாகவே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசின் கதவுகளைத் தட்டித் தட்டி ஓய்ந்திருக்கின்றனர்.

தேர்தல் நேரங்களில் மட்டும், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக முடக்க முயற்சிக்கும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும், தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் எண்ணமே இல்லை என்பது தெளிவாகிறது. வேறுவழியின்றி, தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முற்படும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவதும், பொய்யான நம்பிக்கை கொடுப்பதும் என, தற்காலிகமாக அந்தப் போராட்டத்தை தள்ளி வைக்கும் முயற்சியில் மட்டுமே இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் பத்து ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், தொழிலாளர்கள் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் வழங்காமல், தற்போது தேர்தல் நேரத்தில் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்பது போல நாடகமாடும் அதிமுக மீதும், கடந்த 35 மாதங்களாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், தற்போதும் தொழிலாளர்களுக்குத் தீர்வு வழங்காமல் அவர்களை அச்சுறுத்த நினைக்கும் திமுக மீதும், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், கல்வியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் என அனைத்துத் தரப்பினரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும், திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும், மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்காகப் பணி செய்யும் அரசுப் பணியாளர்களை வஞ்சிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம். தினமும் பல கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துத்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத், தமிழக பாஜக நிச்சயம் துணையிருக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News