தேர்தலில் டெபாசிட்டை தக்க வைக்க பாஜக பணம் தர முயற்சி - பாலகிருஷ்ணன்,

ரயில் மூலம் ரூ.4 கோடி பணம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்திலிருந்து, பாஜக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சிக்கிறது என்றும், தோல்வி பயத்தில் டெபாசிட்டையாவது பெறுவதற்கு இந்த முயற்சியை எடுத்துள்ளனர் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2024-04-09 07:19 GMT

பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு 

 பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து பெரம்பலூரிலும், சிதம்பரம் திமுக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து அரியலூரிலும் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பெரம்பலூருக்கு வருகை புரிந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் துறைமங்கலம் பகுதியில் உள்ள மாசிஸ் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் , இன்று மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக உள்ள நான்கு கோடி பணம் ரயில் மூலமாக கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் , பாஜகவின் வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று பணத்தை எடுத்துச் சென்றவர்கள் பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அந்த பணத்தை எடுத்துச் சென்றவர்களின் மூன்று பேர்களில் ஒருவர் நைனார் நாகேந்திரனின் உறவினர் என்றும், இது மட்டுமின்றி அந்த மூவரும் அவரது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்றும் அவரே ஒத்துக் கொண்டுள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்ற தோல்வி பயத்தில் வாக்காளர்களிடத்தில் பண பலத்தைக் காட்டி வெற்றி பெறலாம் என்றும், குறைந்தபட்சம் டெபாசிட் தொகைவயாவது தக்க வைக்கலாம் என்ற நோக்கத்தில் இந்த நடைமுறையை பாஜகவினர் கையாண்டு இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. மேலும் பிரதமர் மோடியும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் ஊழலை ஒழிப்பது தான் எங்களது நோக்கம் என்று கூறி வருகிறார்கள், உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு இருந்திருந்தால் இந்த நான்கு கோடி ரூபாய் எங்கிருந்து பணம் வந்தது இது யாருக்காக அனுப்பப்படுகிறது என்ற விவரத்தினை, கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து பாஜக தலைவர்கள் யாருமே வாய் திறக்காத நிலையில் அவர்கள் தான் இதற்கு பின்னால் இருக்கிற ஊழல் பேர்வழிகள் என்பது தெரிய வருகிறது. இது மட்டுமின்றி தேர்தல் நன்கொடை பத்திரம் சம்பவம். நாடே சிரிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவினருக்கு அருகதை இல்லை என்பதை இது வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது என்றார். இதுகுறித்து ஊழலை ஒழிப்பதாக கூறிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் வாய் திறக்கவில்லை. எனவே இந்த ஊழல் குறித்து வாய் திறக்காத பாஜகவும் அதிமுகவும் கள்ள உறவு வைத்துள்ளது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது என்றார்.

தற்பொழுது பிடிபட்டுள்ளது 4 கோடி என்றால் இதுபோல எத்தனை முறை, எத்தனை தவணை எந்தெந்த தொகுதிகளுக்கு எந்தெந்த வழிவகைகளில் பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இது போன்ற சூழலை பார்க்கும் பொழுது தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது மட்டுமின்றி வட மாநிலங்களிலும் மோடிக்கு எதிரான காற்று வீசுகிறது என்பதை காட்டுகிறது என்றார். இந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற மோடி ஆட்சியில் எந்த விதமான நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை ஜிஎஸ்டி என்ற பெயரில் விலைவாசி உயர்வை அதிகப்படுத்தி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டியுள்ளார். பாஜகவின் இந்த போக்கு அவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான பின்னடைவை தரும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News