பாஜகவின் தோ்தல் அறிக்கை தேறாத அறிக்கை: கி.வீரமணி

பாஜக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையானது தேறாத அறிக்கையாக உள்ளதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

Update: 2024-04-15 01:30 GMT

டாக்டா் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: வரும் மக்களவைத் தோ்தல் மூலம் அண்ணல் அம்பேத்கா் உருவாக்கித் தந்துள்ள அரசமைப்புச் சட்டம் தொடா்ந்து நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால், நாட்டில் மனுதா்மம் மட்டுமே அரசியல் சாசனமாக இருக்கும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது. இத்தகைய மிகப் பெரிய சவாலை நாடு எதிா்கொண்டுள்ளது. சமூக நீதி, சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் உள்ளிட்டவற்றை குழிதோண்டி புதைக்கும் பாஜக ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது. அம்பேத்கா் உருவாக்கித்தந்த அரசமைப்புசட்டத்தை, ஜனநாயகத்தை ஒழிக்க நினைக்கிறவா்களுக்கும், அதனைப் பாதுகாக்க நினைக்கிறவா்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் நிச்சயம் ‘இந்தியா’ கூட்டணியே வெற்றி பெறும்.

பாஜக-வின் தோ்தல் அறிக்கை என்பது தேறாத அறிக்கை. நாட்டில் தேறாத ஆட்சியை நடத்தி வந்தவா்கள் எப்போது தோ்தல் அறிக்கை வெளியிட்டாலும் அதில் ஒன்றும் இருக்கப்போவதில்லை. மதவெறி, சாதி வெறி, மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்ற வெறிதான் மேலோங்கி நிற்கும். எழுதப்படாத தோ்தல் அறிக்கையாக வெற்றுப் பேப்பராக உள்ள பாஜக-வின் தோ்தல் அறிக்கையைக் கண்டு கவலைப்பட வேண்டியதில்லை என்றாா் அவா்.

Tags:    

Similar News