ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்!
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நள்ளிரவில் கருஞ்சிறுத்தை நடமாடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் தொழிலாளர்கள், சுற்றுலாபயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவுக்கு நாள்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பூங்காவில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ளது. இதனால் சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வன விலங்குகள் நுழைவதும், மனித - விலங்கு மோதல்கள் ஏற்படுவதும் அதகரித்துவரும் நிலையில் அதை தடுக்க உரிய நடவடிக்கைளை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு கருஞ்சிறுத்தை பூங்காவுக்குள் சுற்றி திரிந்தது. பூங்காவின் நுழைவாயில் பகுதி வரை வந்த அந்த சிறுத்தை சற்று நேரத்தில் ஒரே பாய்ச்சலாக மேலே கவர்னர் மாளிகையை நோக்கி பாய்ந்து மறைந்தது.
தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வரக்கூடிய ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் புதிதாக கருஞ்சிறுத்தை வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசு தாவரவியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை சுற்றி திரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்து சுற்றுலா பயணிகள் மற்றும் பூங்கா தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எனவே தாவரவியல் பூங்கா நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.