தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு நீர்மோர் - அமைச்சர் சேகர் பாபு
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள 48 முதல்நிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை முத்தையால்பேட்டை இப்ராஹிம் தெருவில் ரூபாய் 96,17,000 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள உருது நடுநலைப்பள்ளியின் வகுப்பறைகளை அமைச்சர் சேகர் பாபு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கப்பன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலை பள்ளி ரூபாய் 2,08,28,000 மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்கள். நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வெயிலின் தாக்கத்தால் வருகின்ற பக்தர்களுக்கு கருங்கல் பதித்த தரையோடு இருக்கக்கூடிய கோவில்களில் கையிர் மேட் ஏற்படுத்தவும், அதேபோல் பெருமளவு பக்தர்கள் வரும் திருக்கோவில்களில் நீர் மோர் தர உள்ளோம். முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோவில்களில் இந்த நீர்மோர் பக்தர்களுக்கு இலவசமாக தரப்பட இருக்கிறது, கபாலீஸ்வரர் கோவிலில் இந்த திட்டத்தை துவக்கி வைக்க இருக்கிறோம் என்றார்.