ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

தஞ்சாவூரில் மின் இணைப்புகளுக்கு பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை திரும்பப் பெற விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-12-11 09:16 GMT
விவசாயிகள் சங்கம் மாநிலத்தலைவர் முகமது இப்ராஹிம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விவசாய மின் இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் நேற்று இச்சங்கத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ஷேக்தாவூது தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வந்தவர்களை தெற்கு மாவட்டச் செயலாளர் முகமது வகி மன்சூர் வரவேற்றார். தெற்கு மாவட்டத் தலைவர் அமல், தெற்கு மாவட்டப் பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.முகமது இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சென்னையில் மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புனரமைப்புக்காக  மத்திய அரசு வழங்கிய நிதி என்பது குறைவாக உள்ளது. எனவே மாநில அரசு கேட்டபடி, மத்திய அரசு கூடுதலாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மிகஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு இயல்பு நிலை திரும்பும் வகையில் மாதம் 50 கிலோ அரிசி, பருப்புகளை இலவசமாக ரேஷன் கடை மூலம் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். அதே போல் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களையும் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, மின்சார வரி, சொத்துவரி, குடிநீர் வரி போன்றவற்றை நிகழாண்டு ரத்து செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரி, குளங்களை கண்டறிந்து அவற்றை போர்கால அடிப்படையில் மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டாரங்களில் நீர்வளத்துறைக்கு சொந்தமான பாசன ஏரிகள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விரைவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் சம்பா, தாளடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வறட்சி நிவாரண நிதியை வழங்க வேண்டும். தமிழகத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் பெருமளவு முறைகேடு நடைபெற்று வருகிறது. எனவே தனியார் காப்பீடு நிறுவனங்கள் மீது மோசடி வழக்கின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இனி வரும் காலத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் மின்சாரத்துறையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளது.

இதற்காக விவசாய இலவச மின் இணைப்புகள், குடிசைகளுக்கான மின் இணைப்புகள், நெசவாளர்களுக்கான மின் இணைப்புகள் என அனைத்திலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. எனவே இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து ஆடு திருட்டு என்பது தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, ஆடு திருடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News