உதயநிதியை போதை அமைச்சர் என அழைக்கலாமா ? - அண்ணாமலை

திமுக பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை 29 பைசா என கூப்பிடுவோம் என உதயநிதி பேசுகிறார். கஞ்சா போதைப்பழக்கம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்கியதால் அவரை போதை அமைச்சர் என கூப்பிடலாமா?. என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

Update: 2024-04-05 05:30 GMT

அண்ணாமலை பிரச்சாரம் 

 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக,  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே பி ராமலிங்கத்தை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பரமத்தி மூன்று சாலை சந்திப்பு பகுதியில் திறந்த வேனில் நின்றபடி வாக்குகள் சேகரித்தத அண்ணாமலை  பேசுகையில், 

திமுக பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என தெரியாமலேயே தேர்தலை சந்திக்கின்றனர்.  தேர்தலுக்கு முன்பே யார் பிரதமர், என தெரிந்து கொள்வது அவசியம். ஆகவே இந்தியா கூட்டணிக்கு செலுத்தும் வாக்கு உதவாத வாக்கு. திமுக முதலமைச்சர், அமைச்சர்கள் செய்ய முடியாத திட்டத்தை திமுக எம்.பி செய்ய முடியுமா ? பாஜக எம்.பி இருந்தால்தான் மாற்றத்தை கொடுக்க முடியும். பாஜக வேட்பாளர் ராமலிங்கம் அனுபவம் மிக்கவர். பாராளுமன்றத்தில் பேசி பல்வேறு திட்டங்களை கொண்டு வருவார்.

திமுகவினர் 33 மாத ஆட்சிக் காலத்தில் எந்தவித திட்டங்களையும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தவில்லை.  திமுக பிரச்சாரத்தில் மோடியை 29 பைசா என கூப்பிடுவோம் என உதயநிதி பேசுகிறார். கஞ்சா போதைப்பழக்கம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்கியதால் அவரை போதை அமைச்சர் என கூப்பிடலாமா? பாஜக 2019 பாராளுமன்ற தேர்தலில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றி விட்டோம். இதனை முன்னுறுத்திய நாங்கள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை சந்திக்கிறோம். 

எல்லா கிராம பகுதிகளுக்கும் பாஜகவினர் சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும். திமுகவின் பொய் வாக்குறுதிகளை முறியடிக்க வேண்டும். வேளாண்மைச் தொழிலுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பெண்களுக்கு அதிகாரம் அளித்து மோடி ஆட்சி நடத்தி வருகிறார். இளைஞர்களின் கனவை  நனவாக்க மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.  அதற்கு நீங்கள் அனைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை பரமத்தியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசினார்.

Tags:    

Similar News