ஏ.சி.சண்முகம் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு!
வேலூரில் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Update: 2024-03-30 10:25 GMT
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதன் படி அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் செய்ய, வாகன ஊர்வலங்கள் செல்வதற்கு தடை உள்ளது. இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் இருந்து மக்கான் சாலையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் வாகன ஊர்வலம் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாகன ஊர்வலத்தில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வேலூர் கன்டோன்மெண்ட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் பகுதியில் அனுமதியின்றி வாகன ஊர்வலம் சென்றதாக பா.ஜனதா வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட 250 பேர் மீது வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.