அகப்பட்டது அச்சுறுத்தல் சிறுத்தை
பந்தலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Update: 2024-01-08 01:18 GMT
நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள ஏலமன்னா பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து வந்தது. இந்த நிலையில் சரிதா என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது. இதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெண் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அதே நாளில் அச்சிறுத்தை மேலும் 2 பெண்களை காயப்படுத்தியது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிருத்திகா என்ற சிறுமியை தாக்கியதில் அவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தொடர்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறுத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை உறுதியளித்ததை எடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று நான்சி என்ற வட மாநில தொழிலாளியின் மகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இதனை கண்டித்து நேற்று இரவு முதல் தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்து நிலையில் நேற்று சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளனர்.