வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயங்காத சி.சி.டி.வி., - முகவர்கள் அதிர்ச்சி
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் (சி.சி.டி.வி.,) கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் டிவி திரையில் திடீரென ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதன்படி இரு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், தலா ஒரு கட்டுபாட்டு கருவிகள், வி.வி.பேட்., என மொத்தம் 7,942 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நீலகிரி தொகுதியில் 70.93 சதவீத வாக்குகள் பதிவானது. ஊட்டி, குன்னூர், கூடலூர், அவிநாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மைய ஸ்ட்ராங் ரூம் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்கனவே கட்டமிடப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு தேர்தல் அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி சார்பாக முகவர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த மையத்தில் 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கி இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை டிவி மூலம் பார்வையிட்டு கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முகவர்கள் அமரும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து அங்குள்ள தொழில்நுட்பப்பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து சரி செய்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு வழக்கம்போல் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திரையில் இயங்கியது. முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான அருணா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்யுமாறு அறிவுறுத்தினார். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "கண்காணிப்பு கேமரா வழக்கம்போல் இயங்கி காட்சிகள் சேமிக்கப்பட்டு வந்துள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிவியில் மட்டும் வெளியாகவில்லை. 20 நிமிடத்தில் இந்த பிரசனை சரி செய்யப்பட்டு தற்போது வழக்கம்போல் இயங்குகிறது," என்றனர்.