வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு மீண்டும் வருகை

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு மீண்டும் வருகை தர உள்ளது.

Update: 2024-01-10 07:37 GMT

வெள்ள பாதிப்பு 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு தேங்கிய தண்ணீரும் படிப்படியாக அகற்றப்பட்டு தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

எனினும் பல்வேறு வீடுகள் இடிந்தும், சேதம் ஆகியும், வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் உள்ளது. இதேபோல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதி மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதி மக்களுக்கு தலா ஆயிரம் என நிவாரண தொகை அறிவித்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு தேவையான நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றார். மேலும் மத்திய குழுவினரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே ஆய்வு செய்து வெள்ள சேதங்கள் குறித்து கணக்கெடுத்து சென்றனர். இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு மீண்டும் வருகிறது.

அந்த வகையில் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை நிர்வாகி மற்றும் ஆலோசகர் கீர்த்தி பிரதீப் சிங் தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பொன்னுசாமி, விஜயக்குமார், ரங்கநாத் ஆதம், ராஜேஸ் திவாரி, தங்கமணி, பாலாஜி ஆகிய7 பேர் கொண்ட குழுவினர் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்த மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் 14-ந் தேதி வரை 4 நாட்கள் ஆய்வு செய்கிறார்கள். இதற்காக 11-ந் தேதி மதுரை வரும் மத்திய குழுவினர் அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்கள். அங்கு வெள்ளத்தால் சேதமான பயிர்கள், சாலைகள், வீடுகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்கிறார்கள். மேலும் வெள்ள பாதிப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News