தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகம் - அமைச்சர்

தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருவதாகவும், சிறைபிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள படகுகளை மீட்பதற்கு எந்தவொரு திடமான நடவடிக்கையும் மத்திய அரசால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2024-06-23 05:45 GMT

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும் முதலமைச்சர் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இலங்கை அரசு மீனவர்களை மட்டும் அவ்வப்போது விடுவித்துவிட்டு, படகுகளை நாட்டுடமையாக்கும் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது என்றும், படகுகளை பறிகொடுத்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துயரத்திற்கு உள்ளாவதாகவும் கூறினார்.

மேலும், தற்போது, இலங்கை சிறையில் தமிழ்நாட்டைச் சார்ந்த 15 மீனவர்களும் 162 மீன்பிடி படகுகளும் உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசானது தமிழ்நாட்டின் மீட்புக்குழு இலங்கைக்கு சென்று விடுதலை செய்யப்பட்ட படகுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதியை இன்று வரை வழங்கவில்லை என்றும், தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு நடத்தப்படும் இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டம் 2022 மார்ச் மாதத்திற்கு பின்னர் இதுவரை நடைபெறவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருவதாக கூறிய அவர், கடந்த காலங்களில் அரசியல் காரணங்களுக்காக மீனவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் மத்திய அமைச்சர்கள் அவ்வப்போது இராமேஸ்வரம் பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுத்தருவோம் என்று வாக்குறுதி தருவதும், சில அரசியல் கட்சியினர் மீனவ பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க வைப்பதும் அவ்வப்போது நடந்து வருவதாகவும், சிறைபிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள படகுகளை மீட்பதற்கு எந்தவொரு திடமான நடவடிக்கையும் மத்திய அரசால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

Tags:    

Similar News