மக்களுக்கு உதவாத மத்திய அரசு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு அவசர காலத்தில் உதவாமல் மத்திய அரசு அவர்களது வாழ்க்கையோடு விளையாடுவது கடுமையான கண்டனத்துக்குரியது, இது தமிழ்நாட்டு மக்களை நோகடிக்கும் செயல் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2023-12-24 01:17 GMT

மக்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஏற்கனவே பெருமழையால் சென்னை  பாதிக்கப்ட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி நெல்லை போன்ற தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வியாழனன்று மாலை தூத்துக்குடி மாநகர் உள்ளிட்ட சில பகுதிகளிலும் வெள்ளியன்று  காலை ஏரல் உள்ளிட்ட சில பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்த்து மக்களை சந்தித்தோம்.  இன்றும் பல கிராமங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

கணிசமான மக்கள் முகாம்களில்தான் தங்கி இருக்கிறார்கள். வீடுகளுக்குள் செல்ல முடியவில்லை. மேலும் 2 நாட்கள் இதே நிலை நீடிக்கும் என தெரிகிறது. நகரின் தெருக்களில்கூட தண்ணீர் முற்றிலும் வடியவில்லை. தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் நேரில் வந்து நிவாரண பணிகளை ஒழுங்கு படுத்தி முடுக்கி விட்டு சென்றிருக்கிறார். அமைச்சர்கள் ஏற்கனவே இங்கு முகாமிட்டு மீட்பு நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.  வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தூய்மை, மின்சார பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பாத நிலைதான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. மின்சாரம் இல்லை. மின் கட்டமைப்பே சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கிறது. அனல் மின் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்து உற்பத்தி நின்றுவிட்டது. அதை சீர்படுத்தி இயக்கவே தாமதமாகும் என தெரிகிறது.

வெள்ளத்தில் பல இடங்களில் சாலை உடைப்பு ஏற்பட்டுள்ளது. தோப்புகளில் ஆடுமாடுகள், நாய்கள் என கால்நடைகள் செத்து மிதப்பதை பார்க்க முடிந்தது. உடனடியாக இதைல்லாம் அகற்றாமல் போனால் மிகப்பெரிய சுகாதாரக்கேடு ஏற்டும். அரசு மேலும் துரிதமாக இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  அமைச்சர்கள் கீதாஜீவன், எ.வ.வேலுவிடம் இதுகுறித்து வலியுறுத்தினேன். 2 நாட்கள் வரை எந்த பகுதிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மக்களை மீட்டெடுப்பதே முக்கியமான பணியாக அரசின் முன்னால் இருந்துள்ளது. கோளவளத்தில் பெரிய உடைப்பு ஏற்பட்டு புதிய ஆறு உருவாகி இருக்கிறது. அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்க வெண்டும். உயிரிழப்பு அதிக அளவில் நடந்திருக்கலாம். அதுகுறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்களில் வெள்ளம் நிரம்பியுள்ளது. அதிலுள்ள மண்ணை எல்லாம் அகற்றி மீண்டும் செயல்படுத்துவது பெரும் சிரமமான பணி என்கிறார்கள்.  பல கிராமங்களில் வீடுகள் இருக்கிறதா என்பதே அவர்கள் முகாமில் இருந்து திரும்பி சென்ற பிறகுதான் தெரிந்துகொள்ள முடியும். இந்த நிலையில்தான் இதை ஒரு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரி்கை வைத்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அப்படி அறிவிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். ஏற்கனவோ பிரதமரை நேரில் பார்த்து நிவாரண உதவியை முதல்வர் கேட்டார்.  ஆய்வுக்குழுவை அனுப்பி மதிப்பீடு செய்தபிறகுதான் தரமுடியும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆரம்பகட்ட உதவியாக இரண்டாயிரம் கோடியையாவது கொடுத்திருக்கலாமே. அவசர காலத்தில் உதவாமல் எப்போது இந்த மக்களுக்கு உதவுவது. மத்திய அரசு மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவது கடுமையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டு மக்களை நோகடிக்கும் செயல். ஆளுநரும் பாஜகவினரும் குறைகூறுவதை விட்டு தமிழக அரசுக்கு நிதியை பெற்றுத்தரட்டும் என்றார்.

Tags:    

Similar News