கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-07-01 01:40 GMT

பைல் படம் 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் 39.7° செல்சியஸ் பதிவாகியுள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32° – 39° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° – 40° செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 38° செல்சியஸ், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 31° – 34° செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 20° – 24° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 36.6° செல்சியஸ் (0.0° செல்சியஸ்) மற்றும் மீனம்பாக்கத்தில் 36.6° செல்சியஸ் (-0.1° செல்சியஸ்) பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்கள் வரும் 4 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags:    

Similar News