இன்று சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்!!
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.;
Metro
சென்னை மெட்ரோ ரெயில் சேவை பயணிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லா பயணத்தை வழிவகை செய்து வருகிறது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் தினந்தோரும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் இல்லாத, அதிவிரைவான பயண அனுபவத்தை மெட்ரோ ரெயில் உறுதி செய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் சேவை விடுமுறை நாட்களில் சிறப்பு அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம். வார நாட்களில் அதிக பயணிகள் பயன்படுத்துவதால், குறைந்த கால இடைவெளியிலும், வார விடுமுறை நாட்களில் சற்றே அதிக நேர இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பொங்கல் தினமான ஜனவரி 14, மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 15 மற்றும் காணும் பொங்கல் தினமான ஜனவரி 16 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் ஞாயிறு / விடுமுறை நாள் அட்டவணைப்படி இயக்கப்பட்டது. இன்று (ஜனவரி 17) சென்னை மெட்ரோ ரெயில் சேவை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. அதன்படி இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். இதில் காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10.00 மணி வரை 7 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். 8.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை 15 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.